கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகில் உள்ளது பின்னலூர் எனும் ஊர். இந்த ஊரின் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டுவந்தது. தற்போது முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடை சில நாட்களாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர் பணி செய்துவரும் செந்தில்குமார், நேற்று (25.05.2021) காலை கடையைப் பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ளார்.
அப்போது கடையின் பின்பக்க சுவரில் பெரிய துளை போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், சேத்தியாதோப்பு காவல் நிலையத்திற்குத் தகவல் உடனடியாக அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா உள்ளிட்ட போலீசார் டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்றனர். டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் இருந்த ஆள் உயர பெரிய துளை போடப்பட்டிருந்ததை ஆய்வுசெய்த போலீசார், செந்தில்குமார் வைத்திருந்த சாவியின் மூலம் கடையைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அட்டைப் பெட்டிகளில் இருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.