குண்டர்களை வைத்து நக்கீரன் செய்தியாளர்களை தாக்கி வாகனத்தை சேதப்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகிகளை வன்மையாக கண்டித்து முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “நக்கீரன் வார இருமுறை இதழ் தமிழகத்தில் பல வருடங்களாக, முக்கியமான நிகழ்வுகளின் பல உண்மை முகங்களை வெளிக்கொண்டு வந்த பத்திரிகை. அந்த வகையில் 12ஆம் வகுப்பு மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை பற்றி தொடர்ச்சியாக பல உண்மைகளை ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வந்ததும், கொண்டுவந்துகொண்டிருப்பதும் நக்கீரன் பத்திரிகை மட்டுமே. இந்த ஆத்திரத்தில் செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் செய்தியாளர்களை திட்டமிட்டு கடுமையாக தாக்கி அவர்கள் சென்ற வாகனத்தை சேதப்படுத்திய சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகிகள் மீது தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர்களை வைத்து இயங்கும் அந்த பள்ளியை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனே நிரந்தரமாக மூடி சீல் வைக்க வேண்டும்.
தமிழகத்தின் முக்கிய பத்திரிகை நக்கீரன் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், பத்திரிகை சுதந்திரம் முடக்கப்படுகிறது. எனவே காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் அராஜகமான முறையில் இதுபோல நடக்கும் குண்டர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நாட்டின் நான்காம் தூண் ஊடக செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை அளிக்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.