உலகம் முழுவதும் ஒமிக்ரான் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. நேற்றுவரை (01.12.2021) 12 நாடுகள் மட்டுமே இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரண்டு மடங்காகி 23 நாடுகள் நோய்த் தொற்றால் பாதிப்படைந்துள்ளன.
இந்தியாவில் ஒமிக்ரான் நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்றாலும், தற்போது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேவையான அறிவுரைகளை வழங்கினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டுவருகிறோம். சென்னையைக் காட்டிலும், ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து அதிக பயணிகள் திருச்சிக்குத்தான் வருகிறார்கள். எனவே பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமான ஒன்று. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் ரிசல்ட் வந்த பின்னர் வெளியேற அனுமதிக்கப்படுவர்.
அதன் பின்னர் அவர்கள் 7 நாட்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அவர்கள் காவல்துறையினரால் கண்காணிக்கப்படுவார்கள். பின்தங்கிய நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இலவசமாக டெஸ்ட் எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இணை இயக்குநர் ஜெ. சம்பத்குமார், ஏர்போர்ட் இயக்குநர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.