தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை கடந்த சில நாட்களாக முடங்கி போனது. குறிப்பாக சென்னையில் சில சாலைகள் முழுவதும் பழுதடைந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், " ஒவ்வொரு மண்டலங்களிலும் 100 பழுதடைந்த சாலைகளை கண்டறிந்து சரி செய்ய திட்டம் நாளை முதல் தொடங்கும். ஒருசில நாட்களில் அனைத்து சாலைகளும் சீர் செய்யப்படும். மேலும், அம்மா உணவகங்களில் ஞாயிறு வரை இலவச உணவு இரவு 10 மணி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கி இருந்த 22 சுரங்கப் பாதைகளில் 18 சுரங்கப் பாதைகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. நாளை 2 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்" என்றார்.