வேலை வாங்கித் தருவதாக மோசடி: கட்டி வைத்து அடித்த 9 பேர் கைது
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், மூக்குத்திபாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது-31). இவர், 2014-இல் நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.வி என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியின் விடுதி பாதுகாவலராக பணிபுரிந்தார்.
அப்போது, அப்பள்ளியில், நாமகிரிப்பேட்டை அருகிலுள்ள வடுகத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது-35) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
ஒஎரே பள்ளியில் பணியாற்றிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தில், வினோத்குமார், 'தனக்கு தெரிந்த அரசியல்வாதி மூலம், அரசு பள்ளியில் வேலை பெற்றுத்தருவதாக முருகேசனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, முருகேசன் மூன்று லட்சம் ரூபாயை வினோத்குமார் மூலமாக அவர் அறிமுகம் செய்துவைத்த அரசியல் புள்ளியிடம் வழங்கினர். அப்பிரமுகர், பணி பெற்றுத்தராததோடு, முருகேசன் வழங்கிய பணத்தையும் திருப்பித்தரவில்லை.
இதில், வினோத்குமார் மற்றும் முருகேசன் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம், முருகேசன், சேலத்தில் உள்ள சில இரவுடிகள் துணையுடன், மூக்குதிபாளையம் சென்று வினோத்குமாரை காரில் கடத்தி வந்துள்ளனர்.
பின்னர், சேலம் அருகிலுள்ள அல்லிக்குட்டைவீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வைத்து வினோத் குமாரை, 13 பேர் கும்பல் அடித்து மிரட்டியுள்ளது. இதுகுறித்து, வோநோத்குமாரின் உறவினர்கள் அன்னதானப்பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், அல்லிக்குட்டையில் அடித்து வைக்கபட்டிருந்த வினோத்குமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுதொடர்பாக, அல்லிக்குட்டை காலனி பகுதியை சேர்ந்த இராஜேஷ், அய்யந்துரை, பிரவீன்குமார், வள்ளுவர் நகர் கண்ணன், கருவாட்டுமண்டி பரத், அன்னதானப்பட்டி சரத்குமார், நரேஷ்குமார், ஜெ.ஜெ., நகர் பாண்டியன் மற்றும் தக்காளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஐந்து பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவருமே 20-முதல் 30-வயதுக்கு உட்பட்டவர்கள்.
சிவசுப்பிரமணியம்