Skip to main content

தொழிற்சங்க நிதியில் பல லட்சம் மோசடி: சின்னசாமியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை!

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
CHINNASAMY


அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சின்னசாமி திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை, சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளருமான இருந்தவர் சின்னசாமி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக, அண்ணா தொழிற்சங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், சின்னசாமியை, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தனர்.

 

 

இதையடுத்து, அவர்களே துரோகி என்று விமர்சித்த சின்னசாமி, நீக்கம் அறிவிப்பை, செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், அவர் டி.டி.வி. தினகரன் அணியில் இணைந்திருந்தார். அங்கும் அவருக்கு தொழிற்சங்க பேரவை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே, நேற்று மாலை சின்னசாமியை, சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த போது ரூ.8 கோடி கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிதி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் போலீஸாரால் கோவையில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்டார்.

சென்னை அழைத்து வரப்பட்ட சின்னசாமி, பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்