
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள், மகளிர் குழுவினர் போன்றவர்கள் பயிர்க்கடன், மகளிர் குழு கடன், நகைக் கடன் பெற்று, பல்வேறு வரவு செலவு செலவினங்கள் குறித்து கணக்கு வழக்குகள் வைத்துள்ளனர்.
இந்தக் கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை என்ற பெயரில் போலியாக ரசீது தயாரித்து, அதன்மூலம் நான்கு கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக விழுப்புரத்தில் உள்ள கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்திற்குப் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து கூட்டுறவு துணைப் பதிவாளர் குருசாமி தலைமையிலான அத்துறை அலுவலர்கள் நேற்று (22.06.2021) சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “இந்தக் கூட்டுறவு வங்கியில் செயலாளராக சாதிக் பாட்ஷா, பசுமலை, விஜயராஜ், முருகன் ஆகியோர் பணி செய்துவருகின்றனர். கடந்த மே மாதம் 11ஆம் தேதி உடல்நலக் குறைவால் சாதிக் பாட்ஷா உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்த வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக நான்கு கோடி ரூபாய்க்கு ரசீது அளிக்கப்பட்டுள்ளது. அந்த ரசீது போலியானது என்று புகார்கள் வந்தன. அதுகுறித்து அதிகாரிகள் உத்தரவையடுத்து இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டதில், வைப்புநிதி ரசீதில் கையெழுத்திட்ட அலுவலர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து செயலாளராக இருந்த சாதிக் பாட்ஷா குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். விசாரணை முடிவை இணைப் பதிவாளருக்கு அனுப்பிவைப்போம். அதன் பிறகு அவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்” என்று கூறிச் சென்றனர்.