வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் கால் டாக்ஸி ஓட்டுநர் கிருபானந்தம். இவர், தனது தம்பிக்கு வேலை வாங்கித் தருவதாகத் தலைமை ஆசிரியர் ஒருவர் தன்னிடம் ஐந்து லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவில், “நான் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். வேலூரில் உள்ள அரசு உதவிபெறும்(ஊரீசு) மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் எபிநேசர் என்பவர் அடிக்கடி எனது காரை வாடகைக்கு எடுப்பார். இதனால் எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் என்னிடம் எனது தம்பிக்கு (ஊரீசு கல்லூரி) இவர் பணிபுரியும் பள்ளியின் நிர்வாகத்தின் கீழ் வரும் கல்லூரியில் கிளார்க் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் ஐந்து லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டார். வேலையை எப்போது வாங்கி தருவீர்கள் என்று கேட்டால் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிக்கிறார். இதனால் நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். எனவே வேலை வாங்கி தருவதாக கூறி என்னை மோசடி செய்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பணம் கொடுத்த கிருபானந்தம் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து அவ்வப்போது கேட்டுள்ளார். அப்போது அவர் பேசுவதையெல்லாம் வீடியோவாகவும் கிருபானந்தம் பதிவு செய்துள்ளார். அப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவில், தலைமை ஆசிரியர் எபிநேசர் பேசுகையில், "சீல் போட்டு வைத்திருக்காங்க ரெடியா இருக்கு. நீ என்கூட வா இன்றைக்கு இரவே வாங்கித் தருகிறேன். சொல்றது புரிகிறதா? இந்த கையில் காசை கொடுத்துட்டு அந்த கையில் ஆர்டர் காபியை வாங்கின்னு போ. இது அரசு வேலை தான். அரசு லெவலில் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளர்.
இதற்கு இடையில் மற்றொரு வீடியோவில் தான் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் வேலை வாங்கித் தருவது குறித்து எந்தவித உறுதியான தகவலும் இல்லை என கிருபானந்தம் கேட்கும்போது, இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள தலைமை ஆசிரியர், “நைனா நான் இருக்கிற நான் எழுதிக் கொடுக்கிறேன், ஐந்து லட்ச ரூபாய்க்கு நான் தான் பொறுப்பு. இது அரசு கல்லூரி என்பதால் அரசு பணி தான் கொடுப்பார்கள். அவன் அவன் 10 லட்சம் 15 லட்சம் தர தயாராக இருக்கிறான். நான் தெரிந்த தம்பி என்பதால் இதை உனக்கு செய்து கொடுக்கிறேன். மாதம் 49 ஆயிரம் சம்பளம் 60 வயது வரை சர்வீஸ் இருக்கு. இதையெல்லாம் மேலே உள்ளவர்கள் யோசிக்கிறார்கள் உனக்கு புரியுதா? எனக்கு ஏமாற்றி, பொய் சொல்லி பழக்கம் இல்லை. வேலை இல்லை என்றால் உங்களது பணத்தை நான் திருப்பிக் கொடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து புகாருக்குள்ளான தலைமை ஆசிரியர் எபிநேசர் அவர்களை தொலைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அதை நான் கடனாக பெற்றுள்ளேன். இது குறித்து அவருக்கு எழுதியும் கொடுத்துள்ளேன். விரைவில் நான் வாங்கிய பணத்தைத் திருப்பி தந்து விடுகிறேன் என்றும் அவரிடம் கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.