கொடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டடுள்ளது. தற்போது இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி கொடநாடு கொலை வழக்கில் விசாரணையானது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இதற்காக ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் இன்று காலை நீலகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசீத், துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் அகியோர் பங்கேற்றனர். அப்போது இந்த வழக்கை எவ்வாறு எடுத்துச் செல்லலாம்?, இதற்காக விசாரணைக்கு எத்தனை அதிகாரிகள் தேவை? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறாக நடைபெற்ற ஆலோசனையில் முடிவு எட்டப்பட்டதையடுத்து தான் மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்காக 4 வாரங்கள் அனுமதி கேட்கப்பட்டுள்ளதால் கூடுதலாக தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் ஈடுபட்டவரும் சிறையில் இருப்பதால் வாலையார் மனோஜ் என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதே போல் இந்த வழக்கில் குற்றவாளியாக பத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்ட பங்களாவின் உரிமையாளர்கள், பங்களாவில் நடந்த சம்பவம் குறித்து இதுவரையிலும் புகார் அளிக்கப்படாமலேயே இருக்கிறது. அதனால் இதனையும் விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். வரக்கூடிய நாட்களில் தினமும் நான்கு, ஐந்து பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு அதனடிப்படையில் விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.