கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. ஆவினங்குடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவரை மாணவி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி தனது காதலனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக மாணவி சென்றுள்ளார். அதே பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு மாணவியுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் ஆவினங்குடி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் சென்றுள்ளனர். அங்கு இந்த மூன்று மாணவர்கள் அந்த மாணவியை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து உள்ளனர்.
பின்னர் பத்தாம் வகுப்பு மாணவியிடம், ‘உனது காதலை பற்றியும், பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றியும் உனது பெற்றோர்களிடம் சொல்லி விடுவோம். நாங்கள் சொல்வதைக் கேட்டால் சொல்ல மாட்டோம். போட்டோ வீடியோக்களை டெலிட் செய்து விடுகிறோம்’ என மிரட்டி, அச்சிறுமியை ஆவினங்குடியில் உள்ள தங்களது நண்பனின் வீட்டிற்கு அழைத்துச்சென்று மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை மாணவிக்கு தெரியாமல் அவர்களது போன்களில் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் கடந்த 1ம் தேதி நடந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி மாணவி படிக்கும் பள்ளிக்கு பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வந்து, மாணவர்களின் வீடியோ குறித்து பேசி, மிரட்டி அந்த மாணவியை தாக்கி அத்துமீறலுக்கு முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்த சிறுமி தனக்கு நேர்ந்தவற்றை தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பத்தாம் வகுப்பு படிக்கின்ற மூன்று சிறுவர்களையும், 12ம் வகுப்பு மாணவனையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அச்சிறுவர்களின் போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள மிரட்டல் நபர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆவினன்குடி காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று வழக்கு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமியும், அந்த சிறுவர்களும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.