சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த நான்கு மணிநேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது. நகரின் முக்கிய தாழ்வுப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை பாரிமுனையில் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்த திடீர் கனமழை வாகன ஓட்டிகளைப் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு போலீசார் நெரிசலைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரிமுனையில் கொத்தவால் சாவடி மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
தற்பொழுது வரை எம்.சி.ஆர் நகரில் அதிகபட்சமாக 13 செண்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம்- 12 செண்டிமீட்டர், மீனம்பாக்கத்தில் 8 செண்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 5 செண்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலில், 2015 க்கு பிறகு சென்னையில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2015ல் ஆண்டில் சென்னையில் 20.95 செண்டிமீட்டர் மழை பொழிந்த நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் 2021 ஆண்டு மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.