
சேலம் அருகே, முகம் தெரியாதபோதும் தங்குவதற்கு இடம் கொடுத்து ஆதரித்த மூதாட்டியின் வீட்டிலேயே நகைகளை திருடிச்சென்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் சோனமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி மலையம்மா (60). இவர் மலைப்பகுதிகளில் விளையும் துளசியை பறித்துச்சென்று, சேலம் நகரத்தில் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி அவர் சேலத்திற்கு வந்து விட்டு, வீடு திரும்புவதற்காக பழைய பேருந்து நிலையம் பகுதியில் காத்திருந்தார். அப்போது அவரிடம் பேச்சுக்கொடுத்த மர்ம பெண்கள் இருவர், தாங்கள் சென்னையில் இருந்து சேலத்தில் உள்ள ஒருவரை பார்க்க வந்திருந்ததாகவும், அவருடைய முகவரி தொலைந்து விட்டதால் இன்று இரவு மட்டும் தங்குவதற்கு உங்கள் வீட்டில் இடம் கொடுக்கும்படியும் கெஞ்சி கேட்டுக்கொண்டனர். மேலும், தங்களுடன் உறவுக்காரர் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக கூறி, இரண்டு வாலிபர்களை அந்த மூதாட்டியிடம் அறிமுகப்படுத்தி உள்ளனர். அவர்கள் கெஞ்சியதால் கருணை காட்டிய மலையம்மா, அவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அன்றிரவு, மர்ம பெண்கள் இருவரும் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி, அந்த மூதாட்டியிடம் கொடுத்து, உங்கள் நகைகளை வைத்திருக்கும் இடத்தில் இதையும் வைத்து விடுங்கள். காலையில் ஊருக்குச் செல்லும்போது வாங்கிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். அதையும் நம்பிய மூதாட்டி, அவர்கள் கொடுத்த நகைகளை தான் நகைகள் வைத்திருந்த பெட்டியில் வைத்திருந்தார்.
இந்நிலையில், அதிகாலை நான்கு மணியளவில் மலையம்மாளும், அவருடைய கணவரும் எழுந்து பார்த்தபோது வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களும், இரண்டு வாலிபர்களும் திடீரென்று காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின்பேரில் நகைகளை வைத்திருந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது அவர்களின் நகைகள் இல்லாததோடு, அந்தப் பெட்டியில் வைத்திருந்த தன்னுடைய 8.50 பவுன் நகைகளையும் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த மலையம்மா, இதுகுறித்து பனமரத்துப்பட்டி காவல்நிலைத்தில் புகார் அளித்தார். விசாரணையில், வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த ஜோசப், லலிதா மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வரலட்சுமி, அருண்பாண்டியன் ஆகியோர்தான் மலையம்மாவின் நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மலையம்மாவிடம் திருடிச் சென்ற நகைகளையும் மீட்டனர். அந்த கும்பலுக்கு வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.