பல இடங்களில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம் அதிகரித்துவருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துவரும்போதும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம் தொடந்துகொண்டே இருக்கிறது.
பெரும்பாலும் இதுபோன்ற நிகழ்வுகள் முன்னதாக நகர்புறங்களிலேயே இருந்துவந்தன. ஆனால் தற்போது இந்தக் கலாச்சாரம், கிராமப்புறத்திலும் வேகமாகப் பரவிவருகிறது. அதற்கு உதாரணமாக பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் வேப்பந்தட்டை பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. நேற்று முன்தினம் (31.07.2021) இரவு 10 மணி அளவில் 4 வாலிபர்கள் டூவீலர்களில் வேகமாக வந்து அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகில் நடு சாலையில் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த பிறந்தநாள் கேக்கை, இருசக்கர வாகனத்தின் மேல் வைத்து பட்டாக்கத்தியால் அதனை வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பிறகு அப்பகுதியிலேயே அமர்ந்து மது அருந்தி பிறந்தநாள் பார்ட்டியை சந்தோஷமாக கொண்டாடியுள்ளனர்.
இதனால் ஆத்தூர் - பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் சிலர் தங்கள் செல்ஃபோனில் படம்பிடித்து, வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்தக் காட்சிகளைப் பார்த்த அரும்பாவூர் போலீசார், வேப்பந்தட்டைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த ஜான், ஹரி, பிரபாகர், சூர்யா, ஆகிய நான்கு இளைஞர்களில் ஒருவரான ஹரியின் பிறந்தநாளைத்தான் நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் என்பதைப் போலீசார் விசாரணை மூலம் உறுதி செய்துள்ளனர். அந்த நான்கு பேர்களில் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.