திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் சின்னுபட்டி கிராமம் இங்கு புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றது. இறுதி நாளில் விழா மேடை முன்பு திரண்ட அக்கிராம மக்கள் அனைவரும் இணைந்து புனித அந்தோணியார் பெயரில் புதிய அறக்கட்டளை தொடங்க முடிவு செய்தனர். இதன் மூலம் தங்கள் கிராமத்தில் கல்வி முற்றும் மருத்துவ உதவி கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் நோக்கில் அறக்கட்டளை செயல்படும் என அறிவித்தனர்.
அதனை உடனடியாக செயலுக்கும் கொண்டு வந்தனர். அக்கிராமத்தை சேர்ந்த ஹேமா என்பவர் மகள் கனிஷ்கா என்ற சிறுமி கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு தனது ஒரு கால் மட்டும் இழந்த நிலையில் அந்த சிறுமிக்கு செயற்கை கால் பொறுத்த ரூபாய் 20 ஆயிரம் ரொக்க பணத்தை திரட்டினர். அச்சிறுமியின் குடும்பத்தினரை மேடைக்கு அழைத்து மேலக்கோவில்பட்டி பங்கு தந்தை ஜெயராஜ் கரங்களால் வழங்கினர். ஊர் பிரமுகர்கள் பிரான்சிஸ், ஜான், இளங்கோவன் மற்றும் இளைஞர்கள் அறக்கட்டளையின் சேவை சின்னுபட்டிக்கு மட்டுமல்ல சுத்துப்பட்டிக்கும் சேர்த்துதான் என்கிறார்கள். இப்படி சமூக அக்கறையோடு உதவி செய்ததைக் கண்டு ஊர் மக்கள், இளைஞர்களின் அறக்கட்டளையை பாராட்டினார்கள்.