18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப்பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 293 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள நிலையில் தொண்டர்களுக்கு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'நாட்டை வழி நடத்தும் நாற்பதுக்கு நாற்பது' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள மடலில், 'வெற்றியை வழங்கிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை கரம் குவித்து நன்றியை உரித்தாக்குகிறேன். சர்வாதிகார ஒற்றை ஆட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஜனநாயகத்தின் நம்பிக்கை துளிர்கள் அரும்பி உள்ளன. நாட்டை வழி நடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். மதவாத சக்திகளை ராமர் கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் சரிக்கு சரி இந்தியா கூட்டணி இடம் பெறுவது ஜனநாயகம் காக்கப்படுவதின் அடையாளமாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.