
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (11/12/2021) சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இருந்து நாளை (11/12/2021) காலை கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து தனிவிமானம் மூலம் சேலம் செல்லவுள்ளார். முதலமைச்சருடன் அமைச்சர்களும் சேலம் செல்கின்றனர்.
சேலம் விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பின்பு, சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக அரசு விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறவுள்ள அரசு விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் 30,000- க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் நேரில் வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
அரசு விழாவை முடித்துக் கொண்டு, ஐந்து ரோட்டில் உள்ள ஶ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெறும், மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா படத்திறப்பு விழாவிலும் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் டாக்டர் பிரபு செய்து வருகிறார்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு மீண்டும் சேலம் விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி, சேலம் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் , கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.