திருச்சி மாநகராட்சியில் பலமடங்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரியைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், 61 முதல் 65 ஆவது வரை உள்ள வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் கோரியும் திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி நடைபெற்றது.
திருச்சியை அடுத்த காட்டூர் ஆயில் மில் பகுதியிலிருந்து திருவெறும்பூர் வரை நடைபெற்ற மனிதச்சங்கிலியைத் தொடக்கி வைத்து திருச்சி மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு பேசினார்.
திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாப்பாக்குறிச்சி, எல்லக்குடி, கீழக்கல்கண்டார்க்கோட்டை, ஆலத்தூர் ஆகிய 4 ஊராட்சிகளையும் கடந்த 2015 ல், மாநகராட்சிக்குள்பட்ட 61 முதல் 65 வரை 5 புதிய வார்டுகளாக தமிழக அரசு இணைத்தது. மாநகராட்சி ஆன பிறகு இதுவரை எந்தவித வளர்ச்சிப் பணிகளும், அடிப்படை வசதிகளும் இங்கு நடைபெறவில்லை.
ஆனால் மாநகராட்சி நிர்வாகம் பலமடங்கு வீட்டு வரியை மட்டும் தற்போது உயர்த்தியுள்ளது. மூன்றாண்டுகள் முன் தேதியிட்டு உயர்த்தியுள்ளதால் வீட்டிற்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, உயர்த்தப்பட்ட வீட்டு வரியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். சட்டசபையில் இதுகுறித்து அன்பில்மகேஷ் பேசினார். உடனே துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இனியும் தாமதித்தால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் அளித்த உறுதியின்படி உயர்த்தப்பட்ட வீட்டு வரியை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வரி உயர்வை ரத்துச் செய்ய வலியுறுத்தி திருச்சி மாநகர குடியிருப்போர் நலக் கூட்டமைப்புச் சார்பில் சுமார் 4 ஆயிரம் தபால் வரை திருச்சி மாநகராட்சிக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதன் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையாம்.
இதற்கிடையில் திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முதல்-அமைச்சரின் ஆலோசனையின் படி வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதற்கு ஆவன செய்யப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை புதிதாக உருவாக்கப்பட்ட 61-65 வார்டுகளுக்கு வரி உயர்வு, உயர்த்தப்பட்ட வரிக்கு முந்தைய 2 ஆண்டுகளுக்கான நிலுவை தொகையினை வசூல் செய்வது குறித்து அந்தந்த பகுதி நலச்சங்கங்கள், மாநகர குடியிருப்பு நலச்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மாநகராட்சி ஆணையர் கலந்து பேசி இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர, ஆணையரிடம் பேசி உள்ளேன். என்று செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளனார்.
மக்கள் பிரச்சனையில் முன்னாள் அமைச்சரும் இன்னாள் அமைச்சரும் தலையிட்டு சுமூகமான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.