துப்பாக்கியில் சண்டை போட்ட முன்னாள் அமைச்சரின் அண்ணன் மகன்கள்
தர்மபுரி மாவட்டம் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனின் அண்ணன் மகன் சுரேஷை கடந்த 14ந் தேதி இரவு பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
என்ன ஏது என்று விசாரித்தபோது., முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனோடு பிறந்தவர்கள் இரண்டுபேர் மூத்தவர் பெயர் தருமர். இளையவர் பெயர் வெள்ளியங்கிரி. தருமருக்கு சுரேஷ், ரமேஷ் என இரண்டு மகன்கள். வெள்ளியங்கிரிக்கு வேலாயுதம், செந்தில் என இரண்டு மகன்கள். இந்த இரண்டு குடும்பத்துக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள இராமியம்பட்டியில் சைக்கிள் கடை வைத்திருந்தவர் மணி. மணி இறந்துவிடவே.. அவரது மனைவி சாந்தியிடம் வெள்ளியங்கிரியின் மகன் செந்தில் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதற்கிடையில் பெரியப்பா மகன் சுரேஷூம் சாந்தியிடம் நெருங்க முயற்சி செய்துள்ளார். இதனால் சுரேஷூக்கும், செந்திலுக்கும் சில மாதங்களுக்கு முன்பு அடிதடி நடந்திருக்கிறது.
இந்த முன் விரோதத்தால் நேற்று சுரேஷ்க்கு போதை தலைக்கேறியதும வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு தன் சித்தப்பா வெள்ளியங்கிரி வீட்டுக்கு சென்று செந்திலை கடுமையாகத் தாக்கியதோடு சுட்டுக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
தகவல் அறிந்த பாப்பிரெட்டி போலீஸார் வெள்ளியங்கிரி வீட்டுக்கு வந்து தகராறு செய்துகொண்டிருந்த சுரேஷை சமாதானம் செய்திருக்கிறார்கள். சுரேஷ் போலீசையும் தாக்கி, சட்டையைக் கிழித்துள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் சட்டையையும் கிழித்திருக்கிறார். தகவல் மேலிடம் வரைக்கும் செல்லவே... சுரேஷை போலீஸ் செமையாக கவனித்து அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவுசெய்து சேலம் மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர்.
தகவல் அறிந்த முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் குடும்பச் சண்டை நான் நேற்று மதுரை கூட்டத்துக்குப் போய்விட்டேன். அதனால் பிரச்னை பெரிதாகி விட்டது. மற்றபடி இதில் அரசியல் எதுவும் இல்லை. வழக்கமான பங்காளிச் சண்டை என் கூறி வருகின்றார்.
-எம்.வடிவேல்