வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை மற்றும் அதன் அருகிலுள்ள நிலத்தில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் அடிக்கடி வந்து மேய்ந்துவிட்டு செல்வதால் அதனை வேட்டையாட வேட்டைக்காரர்கள் அடிக்கடி நாட்டு வெடியை பயன்படுத்துவது வழக்கம். இதில் காட்டு விலங்குகள் தவிர வீட்டில் வளர்க்கப்படும் மாடு, ஆடு போன்றவையும் சிக்கி இறந்து வருகின்றன. சட்டத்துக்கு புறம்பான இந்த விவகாரத்தை வனத்துறையோ, காவல்துறையோ கண்டுக்கொள்வதில்லை.
ராணிப்பேட்டை அடுத்த எருக்கந்தொட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தனது பசுமாட்டை, தனது ஊரில் உள்ள பாபு என்பவரின் கரம்பு நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்துள்ளார். அங்கு மேய்ந்துக்கொண்டுயிருந்த மாடு, பனங்கொட்டை ஒன்றை கடிக்க பெரும் வெடிச்சத்தம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்க நிலத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, பசுமாட்டின் வாய் கிழிந்து ரத்தம் சிந்தியது.
இதனைப்பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் கேள்விப்பட்டு ஓடிவந்த ராஜேஸ்வரி அழுதபடியே மாட்டை ராணிப்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்த காவல்நிலையத்துக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் புகார் எழுதி வாங்கி விசாரணை நடத்தினர். மாங்கொட்டைக்குள் நாட்டு வெடியை தயார் செய்து வைத்தவர் மேல்பாடி கிராமம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 26 வயதான சீனுவாசன் என தெரியவந்து அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காட்டுப்பன்றியை வேட்டையாடவே நாட்டு வெடியை தயார் செய்து வைத்தேன் எனச்சொல்லியுள்ளார். அந்த இளைஞர் மீது காட்டு விலங்குகள் வேட்டையாட வெடிமருந்து பயன்படுத்தியது, சட்டத்துக்கு புறம்பாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தது உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலிஸார் என்கின்றனர்.