தமிழகத்தில் கரோனா பரிசோதனை அளவை அதிகரித்து உயிரிழப்பை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி கோரியுள்ள நிலையில், பல்வேறு தரப்புகளில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று நேரில் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''இதோ அமெரிக்காவில் இருந்து ஆக்சிஜன் வருது, சிங்கப்பூரிலிருந்து ஆக்சிஜன் வருது, துபாயிலிருந்து ஆக்சிஜன் வருது... இங்க பேசிட்டோம் அங்க பேசிட்டோம் அப்படின்னாங்க, ஆனா இங்க இறக்கறவங்க இறந்துட்டு தான் இருக்காங்க. இதை தடுப்பதற்கு என்ன வழி? போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓமந்தூரார் மருத்துவமனை வாசலிலேயே ஆம்புலன்ஸ்சிலேயே காத்திருந்து 10,12 பேர் எப்படி இறந்தார்கள். இறப்புக்கு என்ன காரணம்? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதான் என்னுடைய கேள்வி'' என்றார்.