மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி, ஐந்து திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (03/06/2021) தொடங்கிவைத்த திட்டங்கள் குறித்து பார்ப்போம்!
ரேஷனில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் திட்டம் தொடக்கம்!
கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
ரேஷனில் 14 மளிகைப் பொருட்கள் இலவசம்!
கரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கியது.
14 மளிகைப் பொருட்கள் என்னென்ன?
1. கோதுமை மாவு - 1 கிலோ,
2. உப்பு - 1 கிலோ,
3. ரவை - 1 கிலோ,
4. உளுத்தம் பருப்பு - 1/2 கிலோ,
5. சர்க்கரை - 1/2 கிலோ,
6. புளி - 1/4 கிலோ,
7. கடலை பருப்பு - 1/4 கிலோ,
8. கடுகு - 100 கிராம்,
9. சீரகம் - 100 கிராம்,
10. மிளகாய் தூள் - 100 கிராம்,
11. மஞ்சள் தூள் - 100 கிராம்,
12. டீ தூள் இரண்டு பாக்கெட் - 100 கிராம்,
13. குளியல் சோப்பு - 1 (125 கிராம்),
14. துணி சோப்பு - 1 (250 கிராம்).
அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 உதவித்தொகை திட்டம் தொடக்கம்!
பூசாரிகள், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு ரூபாய் 4,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கியது.
12,959 கோயில்களில் மாத சம்பளமின்றிப் பணியாற்றும் சுமார் 14,000 பேருக்கு ரூபாய் 4,000 நிதியுதவி வழங்கப்படும். ரூபாய் 4,000-த்துடன் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்களும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
முன்களப்பணியாளர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி!
கரோனாவால் இறந்த முன்களப்பணியாளர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். கரோனாவால் இறந்த மருத்துவர், மருத்துவப் பணியாளர், காவலர், நீதிபதிகள் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கரோனாவால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்' - 10 பேருக்கு நலத்திட்டம்!
‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 10 பயனாளிக்கு அரசு பயன்களை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை தலைமைச் தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தமிழக தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.