கடலூர் மாவட்டம் பண்ருட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (28.02.2024) காலை 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக டெண்டர் விடுவதில் ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவரும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 10 மணி நேரமாக நடந்து வரும் சோதனையில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 47 ஆவணங்கள், விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை சொத்து ஆவணங்கள் என ரூ. 15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.