நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்களை அச்சுறுத்திவந்த 'டி23' புலியை 18வது நாளாக வனத்துறையினர் தேடிவருகின்ற நிலையில், 'டி23' இறந்திருக்கலாம் என வனத்துறை கருதியது. புலியின் ஆயுட்காலம் 14 வருடங்கள் என்ற நிலையில், 'டி23' புலிக்கு 13 வயது ஆகிறது. அதேபோல் உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி ஒருவேளை இறந்திருக்கலாம் என வனப்பகுதியை ஒட்டியுள்ள நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 8 நாட்களுக்குப் பிறகு ஒம்பெட்டா வனப்பகுதியில் கண்காணிக்க வைக்கப்பட்ட இமேஜ் ட்ராப் கேமராவில் இன்று (12.10.2021) அதிகாலை 3 மணிக்கு 'டி23' புலியின் உருவம் பதிவாகியுள்ளது. மீண்டும் புலி, தேவன் எஸ்டேட், மேல் பீல்டு பகுதிக்குப் புலி திரும்ப வருவதை வனத்துறை உறுதி செய்துள்ளது. ஸ்ரீமதுரையூர் ஊராட்சிக்கு உட்பட போஸ்பேரா பகுதி மக்களுக்குப் புலியின் நடமாட்டம் குறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. வனத்தை ஒட்டிய பகுதிகளில் மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கச் செல்ல வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. முதுமலை வனத்திற்கு உட்பட முதுகுலி, நாகம்பள்ளி பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நான்கு மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் 'டி23' கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.