கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அட்டகாசம் செய்துவந்த கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
ஓசூரில் வனப்பகுதியை ஒட்டி சுற்றித்திரிந்த கொம்பன் மற்றும் மார்க் என்ற இரண்டு காட்டுயானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தியதோடு, மூன்றுபேரை தூக்கிவீசியும் மிதித்தும் கொன்றதால் அச்சத்தில் உறைந்த மக்கள் அந்த யானைகளை பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் கும்கி யானைகள் துணையுடன் சுமார் 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் அந்த இரண்டு காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் சாணமாவு வனப்பகுதியில் கதிரேபள்ளி என்ற இடத்தில் சுற்றித்திரிந்த கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அரைமயக்கத்தில் இருந்த கொம்பனை கும்கி யானையின் துணையுடனும், ஜேசிபியை பயன்படுத்தியும் பிடித்தனர். பிடிக்கப்ட்ட கொம்பன் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட உள்ளது.
மற்றொரு யானையான மார்க்கை பிடிக்க வனத்துறை தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது.