Skip to main content

ஆவின் பாலகத்தில் காலாவதியான பொருள்; உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை!

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Food Safety Department Sudden raid at Salem aavin

 

சேலத்தில், ஆவின் பாலகத்தில் காலாவதியான பன், ரொட்டி, குளிர்பானம் உள்ளிட்ட உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத்துறை  அலுவலர்கள் கைப்பற்றி அழித்தனர்.     

 

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் செயல்பட்டு வருகிறது. இதில், காலாவதியான உணவுப்  பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கதிரவன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள்  சுருளி ராஜா, சிவலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் ஆவின் பாலகத்தில் புதன்கிழமை  (ஏப். 26) திடீர் சோதனை நடத்தினர்.     

 

இந்த சோதனையின்போது, தயாரிப்பு தேதி அச்சிடப்படாத 60 பன் பாக்கெட்டுகள், முன் தேதியிட்ட 16 ரொட்டி பாக்கெட்டுகள், பொட்டல  விவரங்கள் அச்சிடப்படாத 200 மி.லி. கொள்ளளவு கொண்ட 36 பாதாம் கீர் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த ஆவின் பாலகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதும், பழைய செய்தித்தாள்களில் உணவுப்  பொருள்களை பொட்டலம் கட்டிக் கொடுப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, உணவுப்பாதுகாப்புத்துறை விதிகளை மீறியதாக ஆவின்  பாலகத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.     மேலும், பாதாம் கீர் குளிர்பானத்தில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உணவுப்பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு  உள்ளது. ஆய்வகத்தின் அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள்  தெரிவித்தனர்.   

 

இந்த சோதனையில் ஆவின் பாலகத்தில் இருந்து மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.     ஆவின் பாலகம் என்றாலே தரமான பொருள்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்படும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது. இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் தரமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்து  வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், குழந்தைகள் சாப்பிடும் பன், ரொட்டி உள்ளிட்ட பண்டங்களை தரமற்று விற்பனை செய்து வந்த  சம்பவம் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்