உயிரைப் பறிக்கும் கரோனாவின் அச்சம் ஒருபுறம் என்றால், மறுபக்கம் வாட்டும் குடி தண்ணீர் பஞ்சம். அத்துடன் உயிர்வாழ உணவுக்காக அலையும் வேதனை பல்வேறு அவஸ்தைகளால் தவிக்கிறார்கள் தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகர மக்கள்.
சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஜனத்தொகையையும் அடித்தட்டு மக்களையும் உள்ளடக்கிய நகரம் சங்கரன்கோவில். மாவட்ட அணைகளில் ஒரளவு தண்ணீர் இருப்பு இருந்தாலும், குறிப்பாக சங்கரன்கோவிலில் மட்டும் குடிதண்ணீர் தட்டுப்பாடு உடலோடு ஒட்டிய உறுப்பாகிவிட்டது. காரணம் பல மாதங்களாகவே இங்கே குடிதண்ணீர் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் என்பது நிர்வாகத்தால் மரபாகவே பின்பற்றப்படுவது தான். இதனாலேயே பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நீண்ட நாட்களாகத் தண்ணீர் வராமலும் முறையாக விநியோகப்படுத்தப்படாத நிலையில் தண்ணீர் வருகிற வீடுகளுக்குப் பெண்கள் படையெடுத்துச் செல்ல வேண்டியநிலை.
இது குறித்து மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூட்டமாகச் சென்று கோரிக்கை வைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையே எனப் பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். மேலும் தற்போது கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு. வீட்டுக்குள் முடங்கித் தனித்திருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. காவல்துறையும், அதிகாரிகளும் சமூகவிலகல், ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நன்மைக்காக கெடு பிடிகளைப் பிரயோகப்படுத்த வேண்டிய கட்டாயம்.
இந்தச் சூழலில் உணவும் தண்ணீருமின்றி உள்ளே இருக்க முடியுமா? எதற்காக அலைவது ஆண்டவனே. எல்லாம் இருந்து விட்டால் ஏன் வெளியே வரவேண்டிய நிலை. கிடைக்கவில்லை என்றால் உயிர்வாழக் கூட்டமாக வெளியே வந்துதானே ஆக வேண்டும். அது ஊரடங்கு மீறல் தானே என்றால் என்ன செய்வது என்கிறார். குடிதண்ணீருக்காக அலையும் கோமதியம்மாள்.
மக்களின் குடிதண்ணீர் சிரமம் குறித்தும், தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சிப் பகுதியில் அனுமதியில்லாமல் குடிநீர் இணைப்பு வழங்கியதே தாமத்திற்கு காரணம் என்கிற தி.மு.க.வின் முன்னாள் எம்.பி யான தங்கவேல். கரோனா அச்சத்தில் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அபாயம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்.
சூழலைக் கருத்தில் கொண்ட அதிகாரிகள், மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலிருக்கிறார்கள் நகர மக்கள்.