சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவன நாதர் சன்னதியில் தொன்மைவாய்ந்த மயில் சிலை இருந்ததாகவும் 2004 ஆம் ஆண்டுக்கு பின் திடீரென அந்த சிலை காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மயில் சிலை மட்டுமல்லாது அக்கோவிலில் இருந்த ராகு-கேது சிலைகளும் மாயமானதாக தொடர் புகார்கள் எழுந்தது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்குக்கு பின்னர் புன்னைவன நாதர் கோவில் சன்னதியில் இருந்த தொன்மைவாய்ந்த மயில் சிலைக்குப் பதிலாக வேறு ஒரு மயில் சிலை வைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் உண்மையான சிலை திருடப்பட்டது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2018 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மயில் சிலையை தேடி வந்தனர். 'முன்பு இருந்த மயில் சிலையின் அலகில் பூ இருந்த நிலையில் புதியதாக வைக்கப்பட்ட சிலையின் அலகில் பாம்பு இருக்கிறது. எனவே அசல் சிலையைக் கண்டறிந்து கோவிலில் வைக்கப்பட வேண்டும். சிலையை திருடியவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்' என்று ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. காணாமல் போன மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா பாம்பா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சமீபத்தில் கோவில்களின் ஆகம விதிகளை கண்டறிய அமைக்கப்பட்ட குழுவிற்கு இந்த வழக்கை அனுப்புவதாகவும், அவர்கள் அந்த மயில் சிலையின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்துவார்கள் என்று கூறியதோடு, அதேநேரம் சிலை திருடியதாகக் கூறப்படும் குற்றவியல் வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.