Skip to main content

ஆயுத பூஜையை முன்னிட்டு விற்பனைக்கு குவிந்த பூக்கள்! 

Published on 09/10/2024 | Edited on 09/10/2024
Flowers for sale ahead of Ayudha Puja

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், பாண்டிக்குடி, குளமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, மாங்காடு, வடகாடு, அணவயல், நெய்வத்தளி மற்றும் கீரமங்கலத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளாக மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. அதே போல வம்பன், மறவன்பட்டி, சம்மட்டிவிடுதி, காயாம்பட்டி, மழையூர் மற்றும் திருவரங்குளம் பகுதி கிராமங்களிலும் மலர்களின் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஏராளமான விவசாயிகள் மலர் உற்பத்தியையே பிரதான விவசாயமாகச் செய்து வருகின்றனர்.

அதே சமயம் ஆயுத பூஜைக்கு வாகனங்கள் மற்றும் சாமி தரிசனங்களுக்காக அதிகமான மாலைகள் தேவைப்படுகிறது. அதனால் மாலை கட்டுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே மாலைகள் கட்டும் பணிகளைத் தொடங்கி உள்ளனர். இதற்கான மலர்களை கீரமங்கலம் மலர் சந்தையில் வாங்கி மாலைகள் கட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த வகையில் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி திருவரங்குளம் பகுதி விவசாயிகளும் தாங்கள் உற்பத்தி செய்யும் மலர்களைத் திருச்சிக்கு அடுத்து பெரிய மலர் சந்தையான கீரமங்கலத்திற்கு விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.

அதனால் இன்று (09.10.2024) மாலை கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளுக்கு மூடை மூடையாக சென்டி, பச்சை, கோழிக்கொண்டை, வாடாமல்லி போன்ற மாலை கட்ட பயன்படும் மலர்கள் சுமார் 5 டன் அளவில் விற்பனைக்காகக் குவிந்தது. மாலை 5 மணிக்குத் தொடங்கிய விற்பனை பூக்கள் வரத்துக் குறைவால் சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தது. மேலும் மலர்களை வாங்கிச் செல்ல தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, வேதாரண்யம், திருவாரூர், முத்துப்பேட்டை, நாகப்பட்டினம் மற்றும் ஏராளமான ஊர்களில் இருந்தும் பூ வியாபாரிகள் வந்து மலர்களை வாங்கிச் சென்றனர். மலர்களின் தரத்திற்கு ஏற்ப சென்டிப்பூ ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையும், வாடாமல்லி, கோழிக்கொண்டை ரூ. 70, 80, 100 க்கும், பச்சை ரூ. 30, முதல் 40 வரையும் விற்பனையானது. நாளை (10.10.2024) காலையும் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். 

சார்ந்த செய்திகள்