விவசாயிகள் தங்களின் உழைப்பால் விளைவித்த பயிருக்கு, உழைப்புக்கேற்ற ஊதியத்தோடு உரியவிலை கிடைத்தால், அவர்களுக்கு அதை விட மகிழ்ச்சி ஏது...? ஆம் அப்படி மகிழ்ச்சியடைந்துள்ளனர், பூக்களை சாகுபடி செய்த விவசாயிகள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பவானிசாகர், கொத்தமங்கலம், புதுவடவள்ளி, சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அங்குள்ள விவசாயிகள் மல்லிகைப்பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலத்தில் உள்ள விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏலமுறையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளுக்கு இந்தப் பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில், திருமண நிகழ்கள், சுபகாரியங்கள் கூடுதலாக நடைபெறத் தொடங்கியதின் காரணமாகவும், பூக்களின் வரத்துச் சற்று குறைவாகிப் போனதின் காரணமாகவும், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், பூக்களின் விலை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 1,260 க்கும், முல்லைப் பூ கிலோ ரூபாய் 770 க்கும், காக்கடா பூ கிலோ ரூபாய் 525 க்கும், ஜாதி முல்லைப் பூ கிலோ ரூபாய் 600க்கும், கனகாம்பரம் கிலோ ரூபாய் 600 க்கும், சம்பங்கி பூ கிலோ ரூபாய் 100 க்கும் ஏல முறையில் விலை நிர்ணயக்கப்பட்டு விற்பனையானது இதனால், பூக்களை உற்பத்தி செய்த விவசாயிகள் மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.