ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்ததால் தமிழ்நாட்டில் சுபநிகழ்ச்சிகள் களைகட்டியிருக்கிறது. இன்று (20.08.2021) முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூவின் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ கடந்த வாரங்களில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிலோ 2,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் சந்தையில் மதுரை மட்டுமல்லாது சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பூக்களை விற்பதற்காகவும், வாங்குவதற்காகவும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் வருகை தருவார்கள்.
நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 100 டன் பூக்கள் இச்சந்தையில் விற்பனையாகும். இந்நிலையில், இன்று முகூர்த்த தினம், நாளை ஓணம் பண்டிகை, வரலட்சுமி நோன்பு ஆகியவை வரும் நிலையில், பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ 2,000 ரூபாய்க்கும், கடந்த வாரம் கிலோ 600 ரூபாயாக இருந்த முல்லைப்பூ 1,000 ரூபாய்க்கும், கனகாம்பரம் 700 ரூபாய்க்கும், சம்பங்கி 400 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 700 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 150 ரூபாய்க்கும் என அனைத்துப் பூக்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. பூக்களின் விலை உயர்ந்தாலும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மலர் சந்தைக்கு அதிக அளவில் வருகை புரிந்துவருகின்றனர்.