ஒன்றிய அரசின் பட்ஜெட்டின் நிதியளிப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்ட யதேச்சதிகாரப் போக்கினைக் கண்டிக்கும் வகையில் திமுகவினரின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நெல்லையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் திமுகவின் மாநகர மாவட்டச் செயலாளரான டி.பி.எம். மைதீன்கான் கிழக்கு மாவட்டச் செயலாளரான ஆவுடையப்பன் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டனர்.
பாளை எம்.எல்.ஏ. அப்துல் வகாப், சிறப்பு பேச்சாளர் தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மாலை ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தமிழகத்தில் மழை வெள்ளத்தில் ஏற்பட்ட பேரழிவுகளை சீர் செய்வதற்கான வெள்ள நிவாரண நிதியைக் கூட ஒன்றிய அரசு வழங்காமல் புறக்கணித்ததோடு, நிதிநிலை அறிக்கையிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது அல்லாமல் நிதி ஒதுக்கப்படாததைக் கண்டித்தும் பெருங்குரலெழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் ஹைலைட்டாக, பிரதமர் மோடி அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு அல்வா கொடுக்கப்பட்டதை நினைவூட்டுகிற வகையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெல்லை அல்வாவும், முட்டையும் வழங்கப்பட்டது. மேலும் இந்த பட்ஜெட்டில் தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றப்பட்டதை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் தங்களின் காதுகளில் பூ சுற்றி வந்தது, ஒட்டு மொத்தப் பார்வையாளர்களின் புருவங்களை உயர வைத்தது.