வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை தினசரி பெய்துவருகிறது. அதிலும் கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (16.10.2021) இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களிலும் சிறு சிறு ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் விருத்தாச்சலம் மன்னம்பாடி, எடையூர், நரசிங்கமங்கலம், கிழப்பாவூர், கோவிலூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
விருத்தாச்சலம் சென்றுவரும் வழியில் மன்னம்பாடி - எடையூர் கிராமங்களுக்கிடையே உப்பு ஓடை செல்கிறது. இந்த ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்த தரை பாலத்தை தண்ணீர் மூழ்கடித்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக விருத்தாச்சலம், பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய நகரங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே வரும் காலங்களில் இதுபோன்ற தரைப் பாலங்கள் உள்ள இடங்களில் பெரிய பாலங்கள் புதுப்பித்து கட்ட வேண்டும், அப்படி செய்வதன் மூலம் மழைக்காலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படுவது இருக்காது. எனவே தமிழ்நாடு கிராமப்புற சாலைகளில் தரை பாலங்கள் உள்ள இடங்களில் அதை விரிவுபடுத்தி, பெரிய பாலங்களாக கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதனை அதிகாரிகளும் தமிழ்நாடு அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம்.