தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையால் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் அதிகமாகத் தேங்கியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகளும் நிரம்பி ஓடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தரைப்பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக ஜல்லிக்கட்டுக்குப் பிரபலமான மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலையாற்றில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து ஓடுவதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்தப்படும் பகுதியிலும் நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது. தொடர் மழை காரணமாக மலைப்பகுதியில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.