பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை தொழிற்பேட்டை பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளதால் இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதேபோல் தொழிற்பேட்டையைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் ஏழாம் கண் மதகு கால்வாய் மூடப்பட்டதால் தண்ணீர் புகுந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வருவதால் நேமம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லக்கூடிய ஏழாம் கண் மதகு கால்வாயானது அடைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தப் பகுதியில் வெள்ளநீர் வந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.