வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து மழை பொழிவதால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. சாலைகளில் போடப்பட்டுள்ள தரைப்பாலங்கள் சேதமடைந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலை வழியாக சென்னை, பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள்தோறும் செல்கின்றன. விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே உள்ள 21 கிலோமீட்டர் சாலையைக் கடந்து செல்ல அதிக நேரமாவதன் காரணமாக சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தில் ரூபாய் 136 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் சாலை விரிவாக்க பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் செம்பளக்குறிச்சி, சின்னவடவாடி அருகே புதிதாக இரண்டு பாலங்கள் கட்டுமான நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பாலம் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே வாகன ஓட்டிகள் செல்வதற்காக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பொழிந்த தொடர் மழையின் காரணமாக தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. வயல்வெளிகளில் இருந்து வரக்கூடிய வெள்ள நீர் பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலையில் அடைபட்டதால் சாலையை கடந்து வெள்ளம் சென்றது. இதனால் சாலை மற்றும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால் வெட்டி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் ஆலடி சாலையில் 12 கிலோமீட்டர் தூரம் மாற்று பாதையில் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
அதேபோல் விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதை வழியாக செம்பளக்குறிச்சி, சின்னபண்டாரங்குப்பம், கவணை, சித்தேரிக்குப்பம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் தினசரி சென்று வருகின்றனர். தொடர் மழையால் இந்த ரயில்வே சுரங்கப் பாதையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் மாற்றுப்பாதை வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை முதல் தொடர்ந்து மழை பொழிவதால் இந்த இரு பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.