நாகா்கோவிலில் ரயில் மறியலில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனா்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய தினசாி ரயில்களில் கன்னியாகுமாி எக்ஸ்பிரஸ் ரயில் மிக முக்கியமானதாகும். இந்த ரயில் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமாி ரயில் நிலையத்தில் இருந்து நாகா்கோவில் வந்து அங்கிருந்து தினமும் மாலை 5.20 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரயிலில் தினமும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் கன்னியாகுமாி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 15-ம் தேதியில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேளி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு பயணிகள் கடும் எதிா்ப்பு தொிவித்தனா். மேலும் கொச்சுவேளி வரை ரயில் நீட்டிக்கப்பட்டதால் தினமும் மாலை 5.20 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய ரயில் தற்போது தினமும் ஓரு மணி நேரம் காலதாமதமாக செல்கிறது இதனால் பயணிகள் பெரும் அவதிப் படுகின்றனா்.
இதற்கு எதிா்ப்பு தொிவித்து கொச்சுவேளி வரை நீட்டிக்கப்பட்டதை ரத்து செய்யவும் குமாி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தியும் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சாா்பில் இன்று நாகா்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனா். இதில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ,காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமாா், பிாின்ஸ், விஜயதரணி உட்பட அக்கட்சியினா் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லக்கூடிய அனந்தபுாி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ரயில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள் உட்பட 400 பேரை போலிசாா் கைது செய்தனா்.