Skip to main content

நண்பர்களுக்குள் சண்டை; பெண்ணின் மரணத்தை மறைக்கத் திட்டம்! அதிரடியாக அரஸ்ட் செய்த காவல்துறை!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

Five arrested near viluppuram in woman passes away case

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள காரணை பெருச்சானூர் ஊரில் பகுதியில் வசித்து வந்தவர்கள் நாராயணன்(41) மற்றும் மாணிக்கம்(55). இவர்கள் இருவரும் சேம்பூர் என்ற பகுதியில் ஒன்றாக தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வந்த நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு காரணை பெருச்சானூர் கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. அருகில் இருந்தவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

வீட்டுக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு குறித்து நாராயணன் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் அவரது மனைவி பூங்காவனம், அவரது மகன் மணிகண்டன், அவரது சகோதரர் முருகன், முருகன் மனைவி, அவரது மகன் அஞ்சா மணி ஆகியோர் ஒன்று சேர்ந்து நேற்று அதிகாலை ஒரு மணியளவில் நாராயணன் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டு அடிதடியிலும் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்ட நாராயணன் மனைவி லட்சுமி, சண்டை வேண்டாம் என்று கூறி தடுக்கச் சென்றுள்ளார். அவரை அடித்துக் கீழே தள்ளியுள்ளனர். 

 

கீழே விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதை மறைத்து வெளியில் யாரிடமும் சொல்லாமல் அவரது உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்த ரகசியத் தகவல் கண்டாச்சிபுரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், லட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் விக்கிரவாண்டி ஆய்வாளர் விநாயக முருகன், கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதுகுறித்து நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணிக்கம், அவரது மனைவி பூங்காவனம், மகன்கள் மணிகண்டன், முருகன், அவரது மனைவி அஞ்சலை, அவரது மகன் அஞ்சாமணி 5 ஆகிய பேரையும் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்