காசிமேட்டில் மீனவ சங்கங்கள் மோதல்
சீன இன்ஜின் பொருத்திய விசைப்படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காசிமேடு பகுதியில் மீனவர் சங்கங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கங்கள் உள்ளன. இங்கு கடந்த ஒரு வாரமாக இரு சங்கத்தினரிடையே அதிக திறன் கொண்ட சீன நாட்டின் இன்ஜினை பயன்படுத்தி மீன் பிடிப்பதாகவும், அப்படி மீன்கள் பிடிப்பதால், மீன் வரத்து குறைவதாகவும், அதை தடுக்க வலியுறுத்தி, கடந்த வாரம் செங்கை விசைப்படகு மீனவர் சங்கத்தினர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் மீனவ சங்கத்தின் ஒரு தரப்பினர், அதிக திறன் கொண்ட சீன இன்ஜின்கள் பயன்படுத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மீன்பிடி துறைமுகம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பினரையும் சமசரம் செய்தனர்.