மீனவர்களின் போராட்டத்தை தூண்டிவிடப்பட்டது எனக்கூறி கொச்சைப்படுத்த விரும்பவில்லை: நிர்மலா சீதாராமன்
ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மேலும் பலர் காணாமல் போயிருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதாகவும், அவர்களை மீட்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்,
ராணுவத்துறைக்கு தேவையான உபகரணங்கள் கோவை கொடிசியா மூலம் தயாரிக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவ தயாரிப்பு மையமாக கோவை கொடிசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். ஒகி புயலை தொடர்ந்து கடந்த நவம்பர் 30 தேதியிலிருந்தே காணமால் போன மீனவர்களை தேடும் பணிகள் விமான படை மூலமாகவும், கப்பற்படை மூலமாகவும் தீவிரமாக நடைபெற்றதாகவும், இப்பணிகள் டிசம்பர் 26ம் தேதியுடன் நிறைவடைந்ததாகவும தெரிவித்தார்.
மேலும் மீனவர்களை தேடும் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மேலும் பலர் காணாமல் போயிருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதாகவும், அவர்களை மீட்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்ன தேவை என்பதைக் எங்களிடம் சொன்னாள் மத்திய அரசு உதவ தயார் எனவும், மீனவர்களின் தொடர் போராட்டத்தை தூண்டிவிடப்பட்டது எனக்கூறி கொச்சைப்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுப்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தோடு பேச உள்ளதாகவும் அவர் கூறினார்.