Skip to main content

காகிதமில்லாத முதல் பட்ஜெட்! தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர்! 

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

Paperless first budget! Finance Minister files!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட், வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. முதல் பட்ஜெட்டையே காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டாக தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 

 

கேரளா, இமாச்சல் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாடும் இணைகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில், காகிதத்தின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் ஆகிறது. 

 

இதற்கான நடைமுறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. அதற்கேற்ப சட்டமன்ற பணியாளர்களுக்கு கணிணி பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கலாகவிருக்கும் காகிதமில்லாத நிதிநிலை அறிக்கைக்காக, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் சட்டமன்ற அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமரும் இருக்கைகளில் கையடக்க கணினி பொருத்தும் பணிகள் நடந்துமுடிந்துள்ளன. 

 

நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்கத் துவங்கும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கையின் முன்புற மேஜையில் பொருத்தப்பட்டிருக்கும் கையடக்க கணினியில் பட்ஜெட் உரை ஓடத் துவங்கும். நிதியமைச்சர் படிக்கப் படிக்க ஒவ்வொரு பக்கமாக நகரும். அடுத்த பக்கங்களுக்கு ஸ்கிப் பண்ணி செல்லலாம் என சட்டமன்ற உறுப்பினர்கள் நினைத்தால், அது முடியாது. நிதியமைச்சர் வாசிக்கும் பக்கம் மட்டுமே திரையில் தெரியும். அதற்கேற்ப தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளன. 

 

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழ்நாடு சட்டமன்றமும் தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதற்கு காகிதமில்லா பட்ஜெட் தாக்கலாவது சாட்சி என்கிறார்கள் பேரவைச் செயலக பணியாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்