'தமிழ்நாடு நாள் இன்று' கொண்டாடப்பட்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது. அப்பொழுது சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என சூட்டக்கோரி தியாகி சங்கரலிங்கனார் தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்தார். மாபொசி, ஜீவா உள்ளிட்ட ஏராளமானோர் தமிழ்நாடு கோரிக்கைக்காக குரல் கொடுத்தனர். பலவித போராட்டங்களுக்குப் பின், அண்ணா முதல்வரான பிறகு 1967 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்தார். தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 தேதியே 'தமிழ்நாடு தினம்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் நவம்பர் ஒன்றுதான் தமிழ்நாடு நாள் என சில அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்திருந்தன.
தமிழக முதல்வர் அறிவிப்பின் படி ஜூலை 18 இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் காணொளி வாயிலாக விழாவில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,''தமிழ்,தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். உலகில் முதலில் பிறந்த குரங்கு தமிழ் குரங்குதான். தாழ்ந்துகிடந்த தமிழகத்தைத் தலைநிமிர செய்த நாள் ஜூலை18. தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை அல்ல ரத்தமும்,சதையும் கொண்ட வாழ்க்கை போராட்டம். இந்தியாவின் மொத்த வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவிகிதம். திமுக ஆட்சியில்தான் தெற்கு சிறக்கிறது என்ற பெருமையை தேடித்தந்துள்ளோம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்கள் தமிழகத்தில் தான் இருக்கிறது'' என பேசினார்.