தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில், திமுக தலைமையிலான புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அதிமுக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட நிலையில், தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவைக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (21.06.2021) தொடங்குகிறது .
புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் பேரவையில் இன்று உரையாற்றுகிறார். கரோனா காரணமாக ஏற்கனவே சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிலையில், தற்போதும் கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது மாடியில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுனர் உரைக்குப் பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் 16வது சட்டப்பேரவையில் 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இன்று முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.