தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வீட்டில் வைத்து சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்து வந்த கும்பல் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் இதற்கு முன்பே சில ஆண்டுகளாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கூறுவது தொடர்பான கும்பல்கள் பிடிபட்டிருந்தது நிகழ்ந்திருந்தது. இந்நிலையில் நான்கு பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து ஒரு கும்பல் சோதனை செய்து தெரிவித்ததாகப் புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள நெற்குந்தி முத்தப்பா நகரில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சந்தேகம் இல்லாத வகையில் வீடு ஒன்றில் சாதாரணமாக சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறும் கும்பல் அதற்கான உபகரணங்களுடன் தங்கி இருப்பது தெரிய வந்தது. பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதற்கு ஒருவருக்கு தலா 13,000 பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் அதற்கான கருவிகள் வைக்கப்பட்டு இப்படி செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனைக் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் செய்து வந்துள்ளார். முருகேசன் மருத்துவம் படிக்காதவர் என்பதும் பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் சூட்கேஸ் அளவிலான ஸ்கேன் மெஷினை வைத்து வெறும் ஐந்து நிமிடத்திற்குள் கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என்பதைத் தெரிவித்து வந்துள்ளது அந்த கும்பல். தருமபுரியில் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்து வந்த கும்பல் மீண்டும் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.