தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களில் ஒருவரான அவ்வை நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இவர் 1992ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்துள்ளார். மேலும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து போன்றோரும் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து, “ஓர் அறிவுச் சுரங்கம் என்றுதான் சொல்ல வேண்டும் அவரை. அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபொழுது சொல்லில் மட்டும் வல்லவர் அல்ல, செயலிலும் வல்லவர் எனத் தமிழ் உலகத்திற்குக் காட்டியவர். மூன்று முதல்வரோடு இணக்கமாகப் பணியாற்றுவது என்பது தமிழ்ப் படித்த ஒருவனுக்கு அவ்வளவு எளிதல்ல. முதல்வர் மாறுபட்டாலும் தமிழை முன்னிறுத்தி அவர் மொழிக்கு அதிகமாகச் செய்திருக்கிறார்” எனக் கூறினார்.
அவ்வை நடராஜனின் தமிழ்ப் பணிகளைக் கவுரவிக்கும் விதமாகக் காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவரது இறுதி ஊர்வலம் காவல்துறை மரியாதையுடன் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, ஜகத்ரட்சகன் ஆகியோர் அவ்வை நடராஜனின் உடலை இறுதி ஊர்வலத்தில் சுமந்து சென்றனர்.