இந்தி திணிப்பை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி சளைக்காமல் போராட்டம் செய்யும் என்றார் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜவாஹிருல்லா.
கும்பகோணம் சென்னை சாலையில் அணைக்கரை அருகே உள்ள தத்துவாஞ்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்,
"தமிழகத்திலுள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுதேர்வு நடைபெறும் என தமிழக அரசாணை மூலமாக தெரிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இடை நிற்றல் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக 5 மற்றும் 8 ஆம்வகுப்பு வரை அரசு தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால், இடை நிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகவே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வு அறிவித்துள்ளதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மோடி அரசு கொண்டுவந்துள்ள மக்கள் விரோதமான திட்டங்களை வரவேற்கின்றனர். அத்துடன் ஒரே நாடு, ஒரே ரேசன், பள்ளி கல்வி திட்டம் போன்ற தமிழக நலனுக்கு எதிரான திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கின்றது. இது வேதனையான விஷயம்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அண்ணாவின் படத்தை அகற்றி விட்டு, மோடிதான் எங்களின் டாடி என்று சொல்கிறார். இது எவ்வளவு பெரிய கொடுமை. அதிமுக தொண்டர்கள் இன்னும் அவர்களை நம்புவதுதான் வேதனையின் உச்சம். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என காயிதேமில்லத், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு செப். 14 ந்தேதி கூறினார். ஆனால் அதே செப். 14 ந்தேதி, 70 ஆண்டுகளுக்கு பிறகு அமித்ஷா, இந்தி மொழியைதான் ஆட்சி மொழியாக்குவோம், இந்தி மொழியை கற்றால் தான் நாடு வளர்ச்சி பெறும் என்கிறார். அவரது கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே மொழி என்பது ஆர்எஸ்எஸ் திட்டம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவின் பன்முகத்தன்மை ,கலாச்சாரம் சிதையும். இந்தி மொழியை, இந்தி திணிப்பை கட்டாயப்படுத்தினால், அதனை எதிர்த்து, தமிழகத்திலுள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து மனித நேய மக்கள் கட்சி சளைக்காமல் போராட்டத்தில் ஈடுபடும்," என்றார்.