பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை பட்டப்பகலில் தந்தையும், மகனும் சேர்ந்து கொடூரமாக கட்டையால் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடவண்டி மோகன். இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருந்து வருகிறார். இந்நிலையில், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் பழக்கடை மற்றும் மெழுகுவர்த்தி வியாபாரம் செய்து வரும் தந்தையும் மகனுமாகிய ஆனந்த மாரிமுத்து, மதியழகன் ஆகியோரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியது. ஆத்திரம் அடைந்த தந்தை மதியழகனும், மகன் ஆனந்தமாரி முத்துவும் நடவண்டி மோகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். நடவண்டி மோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தும், இருவரும் கட்டையால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, காவல்துறையால் மீட்கப்பட்ட நடவண்டி மோகன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட ஆனந்த மாரிமுத்து, மதியழகன் ஆகியோரை கைது செய்த வேளாங்கண்ணி பொறுப்பு காவல் ஆய்வாளர் பசுபதி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஆனந்தமாரிமுத்து, மதியழகன் ஆகியோர் மீதும் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் கொடூர தாக்குதல் நடந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.