திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு அரசு கல்லூரிகள் ஒரு சித்தா கல்லூரி கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதுபோல் அடுத்த ஆண்டு நத்தத்தில் அரசுக் கல்லூரி கொண்டுவரப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கிய களம் இணைந்து திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். இலக்கிய கள நிர்வாக செயலாளர் கண்ணன் வரவேற்றார். இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாநகரத்தின் துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு புத்தக ஸ்டால்களை பார்வையிட்டார்.
அதுபோல் அதிக புத்தகங்களை வாங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார். அதன்பின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழக முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி திருவிழாவாக நடந்து வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் கூட 126 அரங்குகள் அமைக்கப்பட்டு, இரண்டு லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, உயர்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
இந்தாண்டு கூடுதலாக 50 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி இருக்கிறது. முதல்வர் கல்வித்துறை மட்டுமல்ல அனைத்து துறையும் வளர வேண்டுமென உழைத்துக் கொண்டிருக்கிறார். அதுபோல் மதுரையில் நூலகம் திறந்து அறிவு களஞ்சியத்தை திறந்து வைத்தார். தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட 32 கல்லூரிகளில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் நான்கு கல்லூரிகள்; ஒரு சித்தா கல்லூரி கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதுபோல அடுத்த ஆண்டு நத்தத்தில் அரசு கல்லூரி அவசியம் கொண்டு வரப்படும். போட்டி தேர்வுக்கான மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றனர். ஆயக்குடியில் மரத்தடியில் படிக்கின்றனர். ஆனால் இன்னும் இரண்டு மாதங்களில் குளிர்சாதன வசதியோடு காலாஞ்சிப்பட்டியில் அரசு சார்பில் போட்டி தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
அதுபோல் அனைத்து இடங்களிலும் விளையாட்டு மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திண்டுக்கல், கல்வித் தேர்வு முடிவில் சற்று பின்தங்கி இருக்கிறது. அதற்காக பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவுறுத்தவும், இந்த ஆண்டு நல்ல தேர்வு மதிப்பெண் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் முதல் பத்து மாவட்டத்திற்குள் கொண்டுவர தகுந்த முயற்சிகள் எடுக்க வேண்டும். 100% தேர்ச்சி கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பிற மாவட்டங்களுக்கு செல்லாமல் அரசு கல்லூரிகள் இங்கு கொண்டுவர ஏற்பாடு செய்திருக்கிறோம் அதுபோல் ஆத்தூர். நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு, வைகையில் இருந்து குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும். அதற்கான முயற்சிகளை அமைச்சர் ஐ.பெரியசாமியும் நானும் எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.