சேலம் பெரியார் பல்கலையில் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவந்தவர் நாஸினி. இவரை கடந்த வாரம் திடீரென்று பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டார்.
எவ்வித குற்றச்சாட்டு குறிப்பாணையும் கொடுக்காமல், விளக்கமளிக்க வாய்ப்பும் அளிக்காமல் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பல்கலை. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி ஒருவரிடம் அவர் பணம் வாங்கியதாகவும், அந்த மாணவி இதுபற்றி முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அனுப்பியதால்தான் பேராசிரியர் நாஸினி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் பல்கலை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எனினும், நாஸினி மீது என்ன மாதிரியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதை பல்கலை தரப்பு இதுவரை பரம ரகசியமாக வைத்திருக்கிறது.
இந்நிலையில், அவர் மீதான புகார் குறித்து விசாரிப்பதற்காக அண்ணா பல்கலை பேராசிரியர் ராமச்சந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் பதிவாளர் தமிழ்செல்வம், பெரியார் பல்கலை ஆங்கிலத்துறை பேராசிரியர் சங்கீதா ஆகியோர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.