கரோனா ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு உணவளிப்பது தமிழகத்தில் பரவலாக நடந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலும், ‘அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபா சார்பில், பேருந்து நிலையம் அருகிலுள்ள சுரேஷ் ஹோட்டலில், தினமும் மதியம் 1 மணிக்கு விலையில்லா பார்சல் உணவு வழங்கப்படும்’ என்று அறிவித்தனர்.
சுரேஷ் ஹோட்டல் என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்கு பரோட்டாவும், மட்டன், சிக்கன் போன்ற நான்-வெஜ் அயிட்டங்களும்தான் நினைவுக்கு வரும். அந்த ஹோட்டலில், இலவசமாக ‘பார்சல் உணவு’ என்றதும், மக்கள் பரபரப்பானார்கள். பரோட்டாவா? பிரியாணியா? என்னவோ தரப்போகிறார்கள் என பசியோடு, துணிப்பை, கூடை, தூக்குச்சட்டி என கண்ணில் பட்டதை கையில் எடுத்துக்கொண்டு, ஆண்களும், பெண்களும், முதியவர்களும், சிறுவர்களும் சுரேஷ் ஹோட்டல் முன்பாக குவிந்தனர்.
முதலில் பொறுமையாக வரிசையில் நின்ற மக்கள், போகப்போக சமூக இடைவெளியோ, கட்டுப்பாடோ இல்லாமல் முண்டியடித்தனர். அங்கு தந்ததென்னவோ சைவ சாப்பாடுதான். ஆனாலும், மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு யாரும் இல்லை. கரோனா பரவலை தடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்று மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடம் நாள்தோறும் வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில், திருவிழா நாட்களில் கூட்டம் சேர்வதுபோல், பரோட்டா கடைக்கு முன்னால் மக்கள் திரண்டவுடன், உணவோடு கரோனாவையும் பார்சல் கட்டி வாங்கிச் செல்வது போல் அல்லவா ஆகிவிட்டது? என்று சமூக ஆர்வலர்கள் பதறினார்கள்.
‘தமிழகத்தின் சிறந்த பெண் எம்.எல்.ஏ.’ என, திருவனந்தபுரம் ரோட்டரி கிளப் கவுரவிக்க, கேரளா சென்று அந்த விருதினைப் பெற்ற சந்திரபிரபா எம்.எல்.ஏ.விடம் “உணவு வழங்குவதாகச் சொல்லி, கரோனா பரவும் நேரத்தில் மக்கள் நெரிசலை ஏற்படுத்தியது ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அழகா?” என்று அலைபேசியில் தொடர்பு கொண்டு தொகுதி மக்கள் கேட்க, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வரை இந்த விவகாரம் போனது. ‘இனி இங்கு உணவு வழங்கக்கூடாது’ என்று சுரேஷ் ஹோட்டலை எச்சரித்து மூடச் சொல்லிவிட்டது, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை.
‘உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணாதே!’ என்பார்கள். சந்திரபிரபா எம்.எல்.ஏ. விஷயத்திலோ, உதவியதே பெரும் உபத்திரவம் ஆகிவிட்டது.