திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பெண் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியின்போது பெண் காவலருக்கு கத்தி குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகரில் பெண் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த காவலர் பயிற்சி பள்ளியில் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தேர்வு செய்யப்படும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 450 பெண் புதிய காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் மதுரை உசிலம்பட்டி முத்துப்பாண்டி பட்டியைச் சேர்ந்த பாண்டி மகள் தங்கம் (24) என்பவரும் பயிற்சி பெற்றுவருகிறார்.
அப்படி இன்று காலை பயிற்சியின்போது துப்பாக்கியை தோளில் சுமந்துகொண்டு தடை தாண்டுதல் ஓடியபோது தங்கம் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது துப்பாக்கியின் முன்பகுதி உள்ள பைனட் எனப்படும் கத்தியை அவர், தனது இடுப்பில் கட்டியிருந்துள்ளார். தடுமாறி தங்கம் கீழே விழுந்த பொழுது அந்த கத்தி தங்கத்தின் தொடையில் ஸ்கேம் பாடு என்னும் உரையை பிய்த்து கொண்டு குத்தியது. இதில், தங்கம் துடிதுடித்து அலறினார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட சக காவலர்கள் ஒடிவந்து தங்கம் தொடையில் குத்தி இருந்த கத்தியை அகற்ற முற்பட்டனர். ஆனால், அகற்றமுடியாததால் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது கத்தியை அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நரம்புகள் கட்டாகும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கத்தியை அகற்றினார்கள். இச்சம்பவம் தொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் நவல்பட்டு பெண் காவலர் பயிற்சி பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.